தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகளை இணைத்து முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு ஆக்க முயற்சிகள் தொடர்பான இரண்டாம் கட்ட கலந்துரையாடல் சித்திரை மாதம் 09ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுகளுக்கான புதிய அரசியல் அமைப்பிற்கான அடிப்படை அம்சங்கள் தொடர்பில் கட்சிகளுக்கிடையிலான இணக்கப்பாடுகள் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அவற்றை பொதுநோக்காக கொண்டு தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வுத்திட்டத்தினை வரைவதற்கான தீர்மானமும் எடுக்கப்பட்டது.
ஏற்கனவே பல்வேறு அரசியற்கட்சிகளும் தாபனங்களும் தமிழ் மக்களின் இனப்பிரச்சனை சார்பாக தீர்வுத்திட்டங்களையும் முன்மொழிவுகளையும் சமர்ப்பித்திருந்தாலும் அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வரைபினை தயாரித்து அதனடிப்படையில் புதிய அரசியல் அமைப்பு விடயம் தொடர்பில் இலங்கை அரசினால் கலந்துரையாடல்கள் முன்வைக்கப்படும்போது இத்திட்ட வரைபே தமிழ் மக்கள் சார்பாக தமிழ்த் தேசிய கட்சிகளினால் முன்வைக்கப்படும் என்ற உடன்பாடும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதன் அடிப்படையில் தமிழ்த்தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளையும் நிபுணர் குழுவையும் உள்ளடக்கி இவ்அடிப்படை அம்சங்களை கொண்டு விரிவான அரசியல் தீர்வுத்திட்டத்தினை வரைவதற்குரிய வரைபுக்குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது.
இக்குழுவில் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை ஒருங்கிணைப்பாளர்களாக சிரேஸ்ட சட்டத்தரணிகள் ரனித்தா ஞானராஜா மற்றும் மரியதாஸ் யூட் டினேஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டு ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி K. கனக ஈஸ்வரன், பேராசிரியர் M. சொர்ணராஜா, பேராசிரியர். N. செல்வக்குமாரன், பேராசிரியர் V.T தமிழ்மாறன், சிரேஸ்ட விரிவுரையாளர். N. சிவக்குமார் கலாநிதி. K. குருபரன் ஆகியோர் நிபுணர் குழுவில் அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டதுடன் கலந்துரையாடலில் பங்குபற்றிய தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகள் சார்பில் தலா ஒரு உறுப்பினர் வீதம் இந்நிபுணர் குழுவில் நியமிக்கப்படுவார்கள் எனவும் முடிவுசெய்யப்பட்டது.
