வணக்கமாத சிறப்பு நிகழ்வாக மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட வவுனியா மறைக்கோட்ட இளையோருக்கான செபமாலை பேரணி வைகாசி மாதம் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வவுனியா மறைக்கோட்ட முதல்வரும் இறம்பைக்குளம் பங்குதந்தையுமான அருட்தந்தை விக்ரர் சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை இராசானந்தம் நீக்கிலஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப்பேரணி மகாறம்பைக்குளம் அண்ணாநகர் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் ஆரம்பமாகி இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தை சென்றடைந்து அங்கு இடம்பெற்ற நற்கருணை வழிபாட்டுடன் நிறைவடைந்தது.

நற்கருணை வழிபாட்டை இறம்பைக்குளம் பங்கின் உதவி பங்குத்தந்தை அருட்தந்தை பெஞ்சமின் அவர்கள் நெறிப்படுத்தினார்.

தொடர்ந்து வவுனியா மறைக்கோட்ட பங்குகளின் இளையோர் ஒன்றியத் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் பொருளாளர்களுக்கான விசேட கலந்துரையாடல் நடைபெற்றதுடன் இக்கலந்துரையாடலில் இளையோரின் எதிர்கால ஆன்மீக மற்றும் சமூகச் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இப்பேரணியில் வவுனியா மறைக்கோட்ட பங்குகளை சேர்ந்த இளையோர், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு நிர்வாக உறுப்பினர்களென 230க்கும் அதிகமானவர்கள் பங்குபற்றினர்.

By admin