மருதனார்மடம் கிறிஸ்தவ இறையியல் கல்லூரியின் ஏழாவது முதல்வராக அருட்பணியாளர் பிரேமன் ராஜன் றோகான் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

வைகாசி மாதம் 28ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மருதனார்மடம் கிறிஸ்தவ சேவா ஆச்சிரமத் தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டின் போது அமெரிக்க சிலோன் மிஸன் திருச்சபையின் தலைவர் அருட்பணியாளர் தேவகுணானந்தன் முன்னிலையில் இவர் பதவிப்பிரமாணம் செய்தபின் பதவித் திருநிலையில் முதல்வராக ஏற்படுத்தப்பட்டார்.

இந்நிகழ்வில் இறைமக்கள், மற்றும் இறையியல் மாணவர்களோடு அங்கிலிக்கன் சபை, மெதடிஸ்த சபை, CSI சபை, இரட்சணிய சேனை மற்றும் கத்தோலிக்க சபை என்பவற்றைச் சேர்ந்த இறைபணியாளர்கள் பங்குபற்றினர்.

வாழைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த புதிய முதல்வர் அருட்பணியாளர் றோகான் அவர்கள் மெதடிஸ்த சபையைத் தனது தாய்த் திருச்சபையாகக் கொண்டவர்.

இதே கிறிஸ்தவ இறையியல் கல்லூரியில் தனது குருத்துவ உருவாக்கத்தைப் பெற்றுக்கொண்ட இவர் இலங்கையின் பல பகுதிகளிலும் குருவாக சேவையாற்றி இறைபணியோடு சமூகப்பணியுமாற்றினார்.

இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையில் முதுகலைமாணிப் பட்டத்தினையும், அமெரிக்காவின் ஈடின் இறையியல் கல்லூரியில் MTS பட்டத்தினையும், மலேசியாவில் உள்ள அலாபாமா பல்கலைக்கழகத்தின் தொலைக்கல்வி நிலையத்தில் கௌரவ கலாநிதிப் பட்டத்தினையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

By admin