வடமாகாண பாடசாலைகளுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட 18 வயதுக்குட்பட்டோருக்கான குத்துச்சண்டை போட்டி, ஆனி மாதம் 13ஆம் திகதி கடந்த சனிக்கிழமை வடமராட்சி சென் தோமஸ் மகளிர் பாடசாலையில் நடைபெற்றது.
இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்களான செல்வன் பிரணாத் 75 – 81 கிலோகிராம் நிறைப்பிரிவில் முதலாம் இடத்தையும், செல்வன் ஜபீஸ் 64 – 69 கிலோகிராம் நிறைப்பிரிவில் முதலாம் இடத்தையும், செல்வன் விதுஸன் 52 – 56 கிலோகிராம் நிறைப் பிரிவில் முதலாம் இடத்தையும், செல்வன் சுலக்ஸன் 46 – 49 கிலோகிராம் நிறைப் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்று தேசியமட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.
அத்துடன் வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டி ஆனி மாதம் 14ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி கூடைப்பந்தட்ட திடலில் நடைபெற்றது.
இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி வேலணை மத்திய கல்லூரியை 37:18 என்ற புள்ளிகள் விகிதத்தில் வெற்றி பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.
அத்துடன் மாகாண மட்ட பாடசாலைகளுக்கிடையிலான ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான செயல்பட்டு மகிழ்வோம் போட்டிகள் ஆனி மாதம் 18ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் தரம் 03, 04 மாணவர்கள் ஆண்கள் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.

