முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட அருட்தந்தை சறத்ஜீவன் அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு வைகாசி மாதம் 18ஆம் திகதி திங்கட்கிழமை உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.

உருத்திரபுரம் பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்கள் தலைமைதாங்கி திருப்பலி ஒப்புக்கொடுத்தார்.

திருப்பலியை தொடர்ந்து அகவணக்கம், அஞ்சலி உரை, ஈகைச்சுடர் ஏற்றல் என்பவற்றுடன் அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் குருக்கள், துறவிகள் இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

இந்நாளில் கொல்லப்பட்டு அங்கவீனர்களாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களோடு ஆயிரக்கணக்கானவர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டிருந்தனர். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களில் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் அவர்களும் ஒருவர்.

இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் போராளிகளின் சரணடைதலுக்கு உதவியாக இருந்த அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் அவர்கள் போராளிகளுடன் இணைத்து பேருந்து வண்டியில் கொண்டுசெல்லப்பட்டு காணாமலாக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin