இத்தாலி நாட்டிலிருந்து வருகைதந்த அகில உலக பிரான்சிஸ்கன் கப்புச்சின் சபை பொது அதிபர் அருட்தந்தை றோபேர்தோ ஜென்யுன், சபையின் ஆசிய பொது ஆலோசகர் அருட்தந்தை லோரன்ஸ் சூசைநாதன், மரியாள் அமைதியின் அரசி தமிழக மதுரை மாநில அதிபர் அருட்தந்தை ஆரோக்கியதாஸ் ஆகியோர் அண்மையில் இலங்கை நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டனர்.
வைகாசி மாதம் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கை நாட்டை வந்தடைந்த இவர்கள் இலங்கையின் தென் பகுதி புனித பியோ மறைப்பணித்தளத்தை தரிசித்தனர்.
தொடர்ந்து 07ஆம் திகதி வியாழக்கிழமை முல்லைத்தீவு சிலாவத்தையில் அமைந்துள்ள கப்புச்சின் Capital Campus இனை பார்வையிட்டு அங்கு இடம்பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்விலும் கலந்துகொண்டனர்.
Capital Campus இயக்குநர் அருட்தந்தை டேவிட் டொமினிக் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற சான்றிதழ் வழங்கும் இந்நிகழ்வில் ஆரிவேர்க் கற்கைநெறியை நிறைவுசெய்த 22 மாணவர்களுக்கும் basic software coding language கற்கைநெறியை நிறைவுசெய்த 06 மாணவர்களுக்கும் outboard mechanic கற்கைநெறியை நிறைவுசெய்த 04 மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் இந்நிகழ்வில் இலங்கை கப்புச்சின் சபை மறைப்பணித்தள அதிபர் அருட்தந்தை ஜேம்ஸ் ஜெரிக் குயின்ரஸ் அவர்களும் கலந்துகொண்டார்.
அத்துடன் அன்றைய தினம் மன்னார் தரணிக்குளம் மறைப்பணித்தள தலைமையகத்தை பார்வையிட்ட அருட்தந்தை றோபேர்தோ ஜென்யுன் அவர்கள் தரணிக்குளம் புனித யோசேவ்வாஸ் ஆலயத்தில் பங்கு மக்களால் வரவேற்கப்பட்டு அங்கு திருப்பலி ஒப்புக்கொடுத்தார்.
தொடர்ந்து 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை தரணிக்குளம் மறைப்பணித்தள தலைமையத்தில் அருட்தந்தை றோபேர்தோ ஜென்யுன் அவர்கள் முன்னிலையல் இலங்கையில் பணியாற்றும் கப்புச்சின் சபை அருட்தந்தையர்களுக்கான பொதுக்கூட்டமும் திருப்பலியும் இடம்பெற்றன.

