மன்னார் மறைமாவட்டம் புனித சிந்தாத்திரை அன்னை ஆலயப் பங்கின் புனித வின்சென்ட் டி போல் சபை பிளக் மடோனா பந்தியால், நியூசிலாந்து நாட்டின் புனித வின்சென்ட் டி போல் சபையின் அனுசரணையுடன் மன்னார்- மடு வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வணிக மையக் கட்டடத் தொகுதி திறப்பு விழா நவம்பர் மாதம் 16ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் இந்நிகழ்வில் கலந்து கட்டடத்தை ஆசீர்வதித்தார்.

தொடர்ந்து, ஆயர் அவர்களும் புனித வின்சென்ட் டி போல் சபையின் இலங்கைக்கான நியூசிலாந்து நாட்டின் ஒருங்கிணைப்பாளர் திரு. ஆர்தர் லூட்ஸ் அவர்களும் இணைந்து வணிக மையத்தைத் திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் பங்குத்தந்தை, அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், புனித வின்சென்ட் டி போல் சபையின் உறுப்பினர்கள் மற்றும் பங்கு மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

அத்துடன் இலங்கை வின்சென்ட் டி போல் தேசிய சபையினால், நியூசிலாந்து வின்சென்ட் டி போல் சபையின் அனுசரணையுடன் சிலாபம் செவ்வந்தீவு கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட பொதுநோக்கு மண்டபம் நவம்பர் மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

அன்றைய தினம் சபை உறுப்பினர்கள் சிலாபத்திலுள்ள டிமுது சிறுவர் இல்லத்திற்கு சென்று அங்குள்ள சிறுவர்களுக்கு உணவுப் பொதிகளையும் வழங்கினர்.

இந்நிகழ்வுகளில் நியூசிலாந்து நாட்டின் ஒருங்கிணைப்பாளர் திரு. ஆர்தர் லூட்ஸ் அவர்களும் கலந்துகொண்டார்.

By admin