மட்டக்களப்பு மறைமாவட்ட மேய்ப்புப்பணிப் பேரவை மாநாடு நவம்பர் மாதம் 14ஆம் திகதி கடந்த சனிக்கிழமை சத்துருக்கொண்டான் கிளேனி மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை லெஸ்லி ஜெயகாந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இம்மாநாட்டில் கடந்த கால செயல்திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட்டதுடன், எதிர்வரும் ஆண்டுக்கான திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், 2027ஆம் ஆண்டு இலங்கைத் திருஅவையில் அனுசரிக்கப்படவுள்ள நற்கருணை ஆண்டை முன்னிட்டு, மறைமாவட்டத்திலும் பங்குத் தளங்களிலும் முன்னெடுக்கக்கூடிய செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன் மறைமாவட்ட புனித யோசேப்பு சிறிய குருமட அதிபர் அருட்தந்தை சுகந்தன் அவர்களால் “பலிபீடத்திலிருந்து பணித்தளத்திற்கு” என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றப்பட்டது.

இம்மாநாட்டில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோர்ஜ் ஜீவராஜ், குருக்கள், துறவிகள் மற்றும் பங்குகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

By admin