யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட TechNova 2026 தொழில்நுட்பக் கண்காட்சி ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி கடந்த புதன்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாணவர்களின் தொழில்நுட்ப அறிவு, விஞ்ஞான ஆர்வம் மற்றும் புத்தாக்கச் சிந்தனைகளை மேம்படுத்தும் நோக்கில் இடம்பெற்ற இக்கண்காட்சியை யாழ்ப்பாண கல்வி வலய தகவல் தொழில்நுட்பப் பாட ஆசிரிய ஆலோசகர் திருமதி வனிதா கதிர்காமநாதன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து ஆரம்பித்துவைத்தார்.

இக்கண்காட்சியில் மாணவர்களின் ரோபோட்டிக்ஸ் மற்றும் நவீன தொழில்நுட்பம் சார்ந்த படைப்புகள் மற்றும் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் ஏனைய பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து இக்கண்காட்சியை பார்வையிட்டனர்.

அத்துடன் கல்லூரியின் விஞ்ஞான- வர்த்தக தின நிகழ்வு ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை கல்லூரி மத்தியூஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட விஞ்ஞான வினா- விடைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கலும் கல்லூரியின் விஞ்ஞான மன்றத்தால் வருடாந்தம் வெளியிடப்படும் ‘பரிணாமம்’ இதழ் -7 வெளியிடூம் நடைபெற்றன.

அத்துடன் வணிக மாணவர் மன்றத்தால் உயர்தரப் பிரிவு வணிக மாணவர்களுக்கான எதிர்பார்க்கை வினா- விடைக்களுடன் கூடிய வினாவிடைத் தொகுப்பு நூல் வெளியீடும், ‘இன்றைய தொழிநுட்ப பெரும் புரட்சியுக போக்கின் அடிப்படையில் எதிர்கால உலகை முற்போக்குடன் வழிநடத்த வல்லது விஞ்ஞானக் கண்டு பிடிப்புக்களா?அல்லது வணிக முதலீடுகளா?’ எனும் தலைப்பில்
பட்டிமன்றமும் நடைபெற்றன.

யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீடப் பேராசிரியர் ரஜீமேஸ் அவர்கள் பிரதம விருந்தினராகவும், சமுர்த்தி மகா சங்க பிரதி முகாமையாளரும் யாழ்ப்பாண கம்பன் கழக செயலாளருமான சொல்லருவி கருணாகரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் அயற் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்களென பலரும் கலந்து சிறப்பித்தனர்.

By admin