யாழ். மறைமாவட்ட புனித வின்சன்ட் டி போல் மத்திய சபை வருடாந்த பொதுக்கூட்டமும் வின்சன்ட் டி போல் திருவிழாவும் புரட்டாதி மாதம் 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சபை ஆன்மீக ஆலோசகர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களின் வழிநடத்தலில் தலைவி சகோதரி யாக்கோப் மரியநாயகி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்களின் தலைமையில் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
திருப்பலி நிறைவில் பேராலய மண்டபத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றதுடன் இக்கூட்டத்தில் கடந்த வருட செயற்பாட்டறிக்கையும் கணக்கறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டன.
அத்துடன் இந்நிகழ்வில் சட்டத்துறையில் கல்வி பயிலும் ஒரு மாணவிக்கான கல்வி ஊக்குவிப்பு பணமும் நோயாளி ஒருவருக்கான வைத்திய உதவி பணமும் வழங்கப்பட்டன.
சட்டத்தரணி அற்புதராஜா அவர்கள் பிரதம விருந்தினராகவும், யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் வின்சென்டி போல் தேசிய சபை செயாளர் சகோதரி பாலேந்திரா செறின் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் மத்திய சபை உறுப்பினர்கள், பந்நிகளின் அங்கத்தவர்களென 450ற்கும் அதிகமானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

