திருகோணமலை மூதூர் புனித அந்தோனியார் மகாவித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறுவர் தின சிறப்பு நிகழ்வு ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை கென்பியூசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களின் எதிர்கால இலட்சிய நடைபவனி, இலட்சிய கண்காட்சி, கலைநிகழ்வுகள், மாணவர்களுக்கான விளையாட்டுக்கள், வலுவூட்டல் பயிற்சிகள் என்பன நடைபெற்றன.
மாணவர்கள் தங்களின் எதிர்கால இலட்சியத்தின் அடிப்படையில் உடையணிந்து பங்குபற்றிய இப்பவனி பாடசாலையில் ஆரம்பமாகி மூதூர் பிரதேச செயலகம், கல்வி வலயம், வைத்தியசாலை ஊடாக மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது.
தொடர்ந்து பாடசாலையில் இலட்சிய கண்காட்சி இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் சிறார்களால் நீதிமன்றம், சத்திர சிகிச்சை கூடம், மற்றும் பாடசாலையில் இடம்பெறும் விடயங்கள் ஆற்றுகை செய்யப்பட்டன.
திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துசிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அயற் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்களென பலரும் கலந்துகொண்டனர்.

