மன்னார் மறைமாவட்டம் உதயமானதன் 50ஆவது ஆண்டு ஜூபிலி விழா 2031ஆம் ஆண்டு கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் ஐந்தாண்டு ஆயத்த தியானத்தின் ஒரு கட்டமாக, வவுனியா மறைக்கோட்டத்தில் நடைபெறவுள்ள புதுப்பித்தல் தியானத்திற்கான முன் ஆயத்தக் கூட்டம், புரட்டாதி மாதம் 16ஆம் திகதி கடந்த புதன்கிழமை வவுனியா மேய்ப்புப்பணி மண்டபத்தில் நடைபெற்றது.
வவுனியா மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை விக்ரர் சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில், மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் வவுனியா மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள புதுப்பித்தல் தியானத்தின் ஏற்பாடுகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன், மறைக்கோட்ட அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் பங்கு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

