மட்டக்களப்பு மறைமாவட்ட குருவும், திருகோணமலை – மட்டக்களப்பு மற்றும் மட்டக்களப்பு மறைமாவட்டங்களின் முன்னாள் குருமுதல்வருமான அருட்தந்தை அருளானந்தம் தேவதாசன் அவர்கள், ஆவணி மாதம் 27ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
1950ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 24ஆம் திகதி சுன்னாகம் – சூராவத்தையில் பிறந்த அருட்தந்தை தேவதாசன் அவர்கள், 1980ஆம் ஆண்டு ஆவணி மாதம் 25ஆம் திகதி திருகோணமலை – மட்டக்களப்பு மறைமாவட்ட குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.
தமது நீண்டகால பணிவாழ்வில் பங்குத்தந்தை, குருமட அதிபர், குருமுதல்வர், மறைக்கல்வி இயக்குனர், சமூகத் தொடர்பு நிறுவன இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தார். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம் உள்ளிட்ட பல ஆலயங்களில் பங்குத்தந்தையாகவும் பணியாற்றியுள்ளார்.
இலங்கை வானொலியின் தமிழ்ச்சேவையில் ஒலிபரப்பான ‘புதிய உலகம்’, ‘சிறுவர் உலகம்’, ‘நற்சிந்தனைகள்’ உள்ளிட்ட கத்தோலிக்க நிகழ்ச்சிகளின் நெறியாளராகவும், ‘தொண்டன்’ சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
கலைத்துறையிலும் சிறந்து விளங்கிய அருட்தந்தை தேவதாசன் அவர்கள், நாடக ஆசிரியராகவும் கலைஞராகவும் பல ஓரங்க நாடகங்கள் மற்றும் வானொலி நாடகங்களை உருவாக்கியதோடு ‘கிறிஸ்தோயக் கலாமன்றம்’ அமைப்பை உருவாக்கி, கிராமப்புறப் பங்குகளில் கலைநிகழ்ச்சிகள் ஊடாக கத்தோலிக்க மறைக்கல்வியை வழங்குவதிலும் முக்கிய பங்காற்றினார்.
2012ஆம் ஆண்டு மட்டக்களப்பு தனி மறைமாவட்டமாக உருவானபோது, அதன் குருவாக இணைந்து குருமுதல்வர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார்.
ஆன்மிகம், மறைப்பணி, ஊடகம், கல்வி மற்றும் கலைத்துறைகளில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அருட்தந்தை அருளானந்தம் தேவதாசன் அவர்களின் பணிவாழ்விற்காக இறைவனுக்கு நன்றிகூறி, அவரது ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.
