ஆண்டவருடைய வழிகளை தூய ஆவியின் துணையோடு புரிந்துகொண்டு மக்களின் உணர்வுகளுடன் உடனிருந்து நம்பிக்கையை ஏற்படுத்துவதே எனது முதன்மைப் பணியென யாழ். மறைமாவட்டத்தின் பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட புதிய ஆயர் பேரருட்தந்தை அன்ரன் றஞ்சித் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமது பணிப்பொறுப்பேற்பு திருப்பலியைத் தொடர்ந்து இடம்பெற்ற உரையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ள ஆயர் அவர்கள் இலங்கை திருஅவை வரலாற்றில் மிக முக்கியமான இடத்தை வகிக்கும் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் உருவாக்கத்திற்காகவும் வளர்ச்சிக்காகவும்; அர்ப்பணிப்புடனும் தியாகத்துடனும் பணியாற்றிய ஆயர்கள் அருட்பணியாளர்கள் மற்றும் பொதுநிலையினரின் வழிநின்று இம் மறைமாவட்டத்தை மேலும் வளர்த்தெடுக்கும் பொறுப்பு தற்போது தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த முப்பது ஆண்டுகளாக இடம்பெற்ற கொடிய யுத்தம் மண்ணுக்கும் மக்களுக்கும் பாரிய வலிகளையும் வடுக்களையும் ஏற்படுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டிய ஆயர், ஆயிரக்கணக்கான மக்கள் தமது உறவுகளையும் உடமைகளையும் இல்லிடங்களையும் இழந்து அகதிகளாக அலைந்து திரிவதுடன், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடியும் நீதிக்காகப் போராடியும் வருவதாகத் தெரிவித்தார்.

இம்மக்களின் உணர்வுகளுடன் உடனிருந்து, அவர்களின் வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்தி, அவர்கள் வாழ்வதற்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பு தமக்கு இருப்பதை நன்கு உணர்வதாகவும் ஆயர் அவர்கள் தெரிவித்தார்.

ஆன்மீக வழியில் கடவுள்மீது உறுதியான நம்பிக்கையுடன், அமைதியான முறையில் நீதியான வழிகளில் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்த ஆயர் அவர்கள் இத்தகைய அணுகுமுறைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு யாழ்ப்பாண மறைமாவட்டத்தில் வாழும் அனைத்து மக்களினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

By admin