யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள், கத்தோலிக்க மக்களின் ஆயராக மட்டுமன்றி, இப்பகுதியில் வாழும் அனைத்து மக்களுக்கும் தந்தையாகவும் மேய்ப்பராகவும் செயற்பட வேண்டுமென யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் புனித மரியன்னை பேராலயத்தில் புதிய ஆயர் பொறுப்பேற்கும் நிகழ்வின் இறுதியில் வழங்கிய வரவேற்புரையில் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிகழ்வு புதிய ஆயரின் வருகை மட்டுமல்ல யாழ்ப்பாண மறைமாவட்ட வரலாற்றிலும் திருஅவை வாழ்விலும் புதிய அத்தியாயத்தின் தொடக்கமென குறிப்பிட்ட குருமுதல்வர் முழுத்தமிழ் சமூகமும் புதிய ஆயரை தமது தலைவராக ஏற்றுக்கொள்கின்றதெனவும் தெரிவித்தார்.

குருக்கள் மற்றும் மக்களின் வாழ்வுடன் பின்னிப்பிணைந்துள்ள மறைமாவட்டத்தின் தியாக வரலாற்றையும் நினைவுகூர்ந்த குருமுதல்வர், மக்களின் விடுதலைக்காக தமது உயிர்களையும் இரத்தத்தையும் அர்ப்பணித்த அருட்தந்தையர்கள் மேரி பஸ்ரியன், லொறட், சரத்ஜீவன், கருணாரத்தினம் உள்ளிட்டோரின் தியாகங்களைச் சுட்டிக்காட்டி காணாமல்போன அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் மற்றும் அருட்தந்தை ஜிம் பிரவுண் ஆகியோரையும் நினைவுகூர்ந்தார்.

யாழ்ப்பாண மறைமாவட்டம் தியாகிகளின் இரத்தத்தால் கட்டியெழுப்பப்பட்ட, விசுவாசத்தின் மறைமாவட்டமென சுட்டிக்காட்டிய குருமுதல்வர், இத்தியாக மரபையும் விசுவாசத்தையும் புதிய ஆயர் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

போரினால் காயமடைந்த மக்களைக் கொண்ட பிரதேசமாக யாழ்ப்பாணம் காணப்படுவதாக குறிப்பிட்டு, காணாமல்போன தமது பிள்ளைகளைத் தேடும் தாய்மார்கள், இழப்புகளையும் இடப்பெயர்வுகளையும் எதிர்கொண்ட குடும்பங்கள், எதிர்காலம் குறித்த கேள்விகளுடன் வாழும் இளைஞர்கள் எனப் பல்வேறு தரப்பினரையும் புதிய ஆயர் சந்திக்க வேண்டியிருக்கும் எனவும் தெரிவித்தார்.

அத்தகைய மக்களின் அனைத்து கேள்விகளுடன் உடன்பயணிப்பவராகவும், அவர்களின் காயங்களையும் துயரங்களையும் புரிந்துகொண்டு ஆறுதலையும் நம்பிக்கையையும் வழங்குபவராகவும் இருக்க வேண்மென எடுத்துரைத்த குருமுதல்வர், மக்கள் புதிய ஆயரை வெறுமனே ஒரு ஆயராகப் பார்க்காமல், தமது கதைகளைக் கேட்கும் தந்தையாகவும், தமது துயரங்களைப் புரிந்துகொள்ளும் மேய்ப்பராகவும் எதிர்பார்க்கிறார்களெனவும் தெரிவித்து, புதிய ஆயரின் பணி இம்மக்களுக்கு குணப்படுத்தல், நல்லிணக்கம், ஆறுதல் மற்றும் நம்பிக்கையை வழங்கும் பணியாக அமைய வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

By admin