மன்னார் மாவட்டத்தின் முள்ளிக்குளம் கிராமத்திலிருந்து மறிச்சிக்கட்டி – பூக்குளம் ஊடாக சிலாபம் பள்ளகண்டல் புனித அந்தோனியார் ஆலயத்திற்குச் செல்லும், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பாரம்பரிய பாதையை வழிபாட்டாளர்களின் பயன்பாட்டிற்காக திறந்து விடக்கோரி முள்ளிக்குளம் கிராம மக்கள் முன்னெடுத்த கவனயீர்ப்பு போராட்டம் ஆடி மாதம் 06 ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை முள்ளிக்குளம் பிரதான வீதியில் நடைபெற்றது.

மன்னார் மாவட்டம் மற்றும் வட மாகாணத்தின் பல பகுதிகளையும் சேர்ந்த கத்தோலிக்க மக்கள் நீண்ட காலமாக இப்பாதையூடாக பள்ளகண்டல் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவில் பங்கேற்றுவரும் நிலையில் தற்போது முள்ளிக்குளத்திலிருந்து மறிச்சிக்கட்டி – பூக்குளம் வழியாக ஆலயத்திற்குச் செல்ல வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் அனுமதி மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள திருவிழாவை முன்னிட்டு, குறைந்தபட்சம் திருவிழா நிறைவடையும் வரை இப்பிரதான பாதையை திறந்து, வழிபாட்டாளர்கள் பயன்படுத்த அனுமதி வழங்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், பாரம்பரிய பாதையூடாக ஆலயத்திற்குச் செல்ல சுமார் 30 கிலோமீற்றர் மட்டுமே பயணம் செய்யவேண்டிய நிலையில், தற்போது அதிகாரிகள் பரிந்துரைத்துள்ள அனுராதபுரம் வழியை பயன்படுத்தினால் சுமார் 200 கிலோமீற்றர் பயணம் செய்ய வேண்டியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இப்போராட்டத்தில் முள்ளிக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை டெரன்ஸ் குலாஸ், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ, நிறுவன பணியாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

பள்ளகண்டல் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஆயத்த வழிபாடுகள் ஆடி மாதம் 08 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நிலையில் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாளையதினம் திருவிழா நடைபெறவுள்ளதுடன் கடந்த ஆண்டுகளில் பக்தர்கள் எவ்வித அசௌகரியமும் இன்றி இந்தப் பாதையூடாக ஆலயத்திற்குச் சென்று திருவிழாவில் பங்கேற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin