இலங்கை அரச விமானப்படையினரால் யாழ்ப்பாணம் நவாலி புனித பேதுருவானவர் ஆலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஆடி மாதம் 09ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை உணர்வுபூர்வமாக அங்கு அனுஸ்டிக்கப்பட்டது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயரஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்டைக்காடு – வெற்றிலைக்கேணி பங்குத்தந்தை அருட்தந்தை விமலசேகரன் வசந்தன் அவர்களின் தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து நினைவுத்தூபி அமைந்துள்ள இடத்தில் அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றன.
1995ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்பு படைநடவடிக்கையால் வலிகாமம் பிரதேச மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகளிலும் ஆலயங்களிலும் புகலிடம் தேடிய நிலையில் நவாலி புனித பேதுருவானவர் ஆலயத்திலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் தஞ்சமடைந்திருந்த ஆயிரக்கணக்கான மக்களை இலக்குவைத்து இலங்கை விமானப்படையினரால் பயங்கரவாத குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இத்தாக்குதலில் ஆலயத்திலிருந்த குழந்தைகள் பெண்கள் உட்பட 147க்கும் அதிகமான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் 400க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

