இலங்கையில் பணியாற்றும் துறவற சபை தலைவர்கள் பேரவை ஒன்றுகூடல் ஆனி மாதம் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நடைபெற்றது.
பேரவை தலைவர் நற்கருணை நாதர் சபை அருட்தந்தை யஸ்ரின் சௌகான் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பேரவை அங்கத்தவர்கள் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பிலிருந்து புறப்பட்டு மன்னார் மடுத்திருத்தலத்தை தரிசித்து அங்கு இடம்பெற்ற திருப்பலி மற்றும் இறைவழிபாட்டில் பங்குபற்றியதுடன் மன்னார் வேதசாட்சிகள் டிலா சால் இல்லம், தோட்டவெளி அமலமரித்தியாகிகள் சபை மது அடிமைத்தன மறுவாழ்வு மையம் ஆகிய இடங்களை பார்வையிட்டனர்.
தொடர்ந்து 22ஆம் திகதி திங்கட்கிழமை திருக்குடும்ப கன்னியர் சபை யாழ். மாகாண இல்லத்தில் ஒன்றுகூடல் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் அறிக்கைகள் சமர்ப்பிப்பு, கருத்துரை, கலந்துரையாடல், என்பனவும் நடைபெற்றன.
கருத்துரையை யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜா அவர்கள் “எல்லைகளுக்கு அப்பால்: மனித நிறைவை நோக்கிய தேடல்” எனம் தலைப்பில் வழங்கினார்.
அத்துடன் அன்றைய தினம் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களும் மாகாண இல்லத்தில் பங்கேற்பாளர்களை சந்தித்தார்.
தொடர்ந்து 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பங்கேற்பாளர்கள் கள அனுபவ பயணம் மேற்கொண்டு நல்லூர் முருகன் கோவில், நிலாவரை கிணறு, சங்கமித்தை விகாரை, மருதனார்மடம் இறையியல் கல்லூரி, யாழ்ப்பாண நூலகம், கோட்டை, யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி, யாழ். புனித மரியன்னை பேராலயம் ஆகிய இடங்களை பார்வையிட்டனர்.
24ஆம் திகதி இறுதிநாள் நடைபெற்ற நிகழ்வில் கலந்துரையாடலும் தொடர்ந்து களதரிசிப்பும் இடம்பெற்றன. களதரிசிப்பில் இலங்கையில் முதலாவதாக ஆரம்பிக்கப்பட்ட திருக்குடும்ப கன்னியர்களின் யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் தேசிய பாடசாலையையும், செம்மணி மனித புதைகுழியையும் பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில் 40 வரையான அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் அருட்பணியாளர்கள் பங்குபற்றினர்.

