தமிழ் மக்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு இடம்பெற்றதை வலியுறுத்தியும், இது தொடர்பாக அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் வெளியிட்ட கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் யாழ்ப்பாண சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்கள், முள்ளிவாய்க்காலில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், பாதுகாப்பு வலயங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச அறிக்கைகள் மற்றும் அமரர் ஆயர் இராயப்பு யோசப்பு அவர்களின் ஐக்கிய நாடுகள் சபை சமர்ப்பணங்கள் உள்ளிட்ட விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களின் அனுபவங்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான தகவல்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர்கள், முள்ளிவாய்க்கால் சம்பவங்கள் தொடர்பாக சுயாதீன சர்வதேச விசாரணை அவசியம் என்றும், உண்மையை ஏற்றுக்கொள்வதே நல்லிணக்கத்தின் அடிப்படை என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த ஊடகச் சந்திப்பில் சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள், உள்ளிட்ட மத, சமூக மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

