மட்டக்களப்பு மறைமாவட்ட ஓய்வுநிலை குரு அருட்தந்தை அன்ரனி லீயோ அவர்கள் சித்திரை மாதம் 05ஆம் திகதி திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
1974ஆம் ஆண்டு திருகோணமலை மட்டக்களப்பு மறைமாவட்ட குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட இவர் மூதூர், வாகரை பங்குகளின் உதவிப் பங்குத்தந்தையாகவும், மட்டுநகர் மரியாள் இணைப்பேராலய இணைப் பங்குத்தந்தையாகவும் பிராந்திய கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தினரின் இயக்குநராகவும், இளையோர் ஆணைக்குழு இயக்குநராகவும் திருமலை – மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயரின் செயலாளராகவும் ஆயரில்லக் குருக்களுக்கும், பணியாளர்களுக்கும் பொறுப்பாளராகவும் சொறிக்கல்முனை திருச்சிலுவைத் திருத்தலம், மூதூர் புனித அந்தோனியார் ஆலயம், கல்முனை திரு இருதயநாதர் ஆலயம், பொத்துவில் புனித அந்தோனியார் ஆலயம், திருகோணமலை சின்னக்கடை குவாடலூப்பே அன்னை ஆலயம் ஆகியவற்றின் பங்குத்தந்தையாகவும் மறைமாவட்ட நுர்நுனு ஸ்தாபன இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
அத்துடன் பிலிப்பைன்ஸ் நாட்டின் மனிலா நகருக்கு பயணமாகி சமூக, பொருளாதார அபிவிருத்தி பற்றிய கல்வியை பயின்றதுடன் திருமலை, உப்புவெளி மேய்ப்புப்பணி நிலைய இயக்குனராகவும் திருமலை பிராந்திய குடும்ப அப்போஸ்தலிக்க பொறுப்பாளராகவும் குடும்ப அப்போஸ்தலிக்கப் பொறுப்பாளராகவும் சத்துருக்கொண்டான் “அன்பின் இல்லம்” பொறுப்பாளராகவும், இறை இரக்க திருத்தல நிர்வாகக் குருவாகவும் பணியாற்றினார்.
இவரின் பணிவாழ்விற்காக நன்றிகூறி இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.
