எல்லாம் முடிந்ததென கங்கணம் கட்டிய சர்வதிகார வர்கத்திற்கு, சவுக்கடிகொடுத்து, உயிர்ப்புத்தான் வாழ்வின் புதிய அத்தியாயமென நிரூபித்து எதுவும் முடியவில்லை இனித்தான் ஆரம்பமென புதுவழிகாட்டிய இறைமகன் எமக்கும் புதுவழிகாட்டுகின்றாரென யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தனது உயிர்ப்பு விழா செய்தியில் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் நடைபெறும் யுத்தமும், வல்லரசு நாடுகளின் யுத்தத்திற்கான முனைப்புக்களும் உலக நாடுகளையும் மக்களையும் ஒட்டுமொத்தமாக பாதிப்புக்குள்ளாக்கியுள்ளதென எடுத்துரைத்த ஆயர் அவர்கள் தொடர்பாடலின் அதிஉச்ச வெளிப்பாடான செயற்கை நுண்ணறிவு, மனித சிந்தனைகளையும் எண்ணங்களையும் முடக்கி மனித ஞானத்தை புறம்தள்ளி கற்பனை உலகை கண்முன் காட்டியதோடு மட்டும் நில்லாமல் மத்திய கிழக்கின் யுத்த அவலங்கள், அழிவுகளுக்கும் காரணகர்தாவாகமாறி பெரும் அவல நிலையும் உருவாகியுள்ளதெனவும் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு யுத்தத்தின் தாக்கங்களான எரிபொருள் தட்டுப்பாடு, பொருளாதார நெருக்கடி எம்மை சூழ்ந்துநிற்க செயற்கை நுண்ணறிவின் தொடர்பாடல் திறன் எம் குடும்பவாழ்வை சிதைத்துள்ளதுடன் ஒழுக்கவாழ்வும் இறைநம்பிக்கையும் எம்மைவிட்டு தொலைந்துபோகின்றதெனவும் கவலை தெரிவித்துள்ள ஆயர் அவர்கள் பெரும் போருக்குள் வாழ்ந்து உயிர் அழிவுகளையும் இழப்புக்களையும் சந்தித்த எம் வாழ்வில் யுத்தத்தின் தாக்கங்கள் இன்னும் எம்மைவிட்டு அகலவில்லையெனவும் காணாமல் போனவர்களுக்கான விடை கிடைக்கவில்லை, பறிபோன சொந்த நிலங்கள் பல இன்னமும் விடுவிக்கப்படவில்லை, நில ஆக்கிரமிப்பும் அத்துமீறிய குடியேற்றங்களும் திரைமறைவில் தொடர்ந்தவண்ணம் உள்ளன, புரையோடிய இனப்பிரச்சனை தீர்கப்படமால் நீண்டுசெல்கின்றதெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிலுவையடியில் நின்ற தனது தாயாரை இதோ உன்தாயென உலகிற்கு கொடையாக தந்த இறைமகன் அன்னை மரியாளின் துணையோடு வாழ்வின் சவால்களை வென்று புதுவாழ்வை கண்டடைய அருள்தருகின்றாரெனவும் எடுத்துரைத்துள்ளார்.

By admin