யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியின் தனிநாயகம் தமிழ் மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட ‘தமிழ் விழா’ பங்குனி மாதம் 23ஆம் திகதி திங்கட்கிழமை கல்லூரி ஜோய் கிறிசோஸ்தம் மண்டபத்தில் நடைபெற்றது.

கல்லூரி அதிபர் அருட்தந்தை பெற்றுஸ் தயாபரன் அவர்களின் வழிநடத்தலில் மன்ற காப்பாளர் அருட்தந்தை குயின்சன் பெர்னான்டோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மன்ற தலைவர் அருட்சகோதரர் சுனில்குமார பீரிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் அமரர் அருட்தந்தை தனிநாயகம் அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு ஒளியேற்றப்பட்டது.

தொடர்ந்து கலைநிகழ்வுகளும் தமிழ்விழா போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றதுடன் சிறப்பு நிகழ்வாக அண்ணாவியார் திரு. அரியநாயகம் அன்று யூலியஸ் அவர்களின் நெறியாள்கையில் திரு. ஜோண்சன் ராஜ்குமார் அவர்களின் எழுத்துருவிலான அதிதூதர் புனித மிக்கேலின் வரலாற்றை சித்தரிக்கும் “விண்ணக வீரன்” வடமோடிக்கூத்தும் அருட்சகோதரர்களால் ஆற்றுகை செய்யப்பட்டது.

யாழ். கல்வி வலய நாடகமும் அரங்கியலும் பாட ஆசிரிய ஆலோசகரும் திருமறைக்கலாமன்ற பிரதி இயக்குநருமான திரு. ஜோண்சன் ராஜ்குமார் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், குருமட மாணவர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin