வரலாறு காணாத பக்தர்களின் பங்குபற்றுதலோடு கச்சதீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல வருடாந்த திருவிழா நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாசி மாதம் 28ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
27ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் வழிபாடுகள் ஆரம்பமாகி, திருச்செபமாலை, சிலுவைப்பாதை தியானம், திருப்பலி என்பவற்றுடன் நற்கருணை ஆராதனையும், புனிதரின் திருச்சுருப பவனியும் இடம்பெற்றன.
தொடர்ந்து சனிக்கிழமை காலை திருவிழா திருப்பலி இடம்பெற்றதுடன் திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இவ்வழிபாடுகளில் அரச உத்தியோகத்தர்கள், கடற்படை உயர் அதிகாரிகள், 200ற்கும் அதிகமான அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து வருகைதந்த 12000ற்கும் அதிகமான பக்தர்கள் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.

