அருட்கொடைகளின் காலமாகிய தவக்காலத்தின் நாற்பது நாட்களையும் மன மாற்றத்தைத் தேடும் நாட்களாகப் பயன்படுத்தி இறை நம்பிக்கையைப் புதுப்பித்து, இறைவேண்டல், பரித்தியாகங்கள் வழியாக இறைவனுடன் நெருங்கி வாழ்வோமென யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் வெளியிட்டுள்ள தவக்கால சுற்றுமடலில் அழைப்புவிடுத்துள்ளார்.

தவக்காலத்தில் நாம் மேற்கொள்ளும் நோன்புகளும் ஏனைய தவ முயற்சிகளும் எம்மை சூழவுள்ள ஏழைகள் துயருறுவோருக்கு வாழ்வுகொடுத்து இறைவனுடன் எம்மை இணைக்கவேன்டுமென்பதுடன் நாம் இத்தவக்காலத்தில் எம்மைவிட தாழ்நிலையிலுள்ளோரை தேடிச்சென்று உதவ முன்னவரவேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளர்.

அத்துடன், யாழ். மறைமாவட்டத்தில் சமூக தொடர்பு ஆண்டாக கடைப்பிடிக்கப்படும் இவ்வாண்டின் தவக்காலத்தில், நாம் சமூகத் தொடர்பு சாதனங்களைப் பொறுப்புடன் மனித நேயத்தை மதித்து, உறவுகளைக் கட்டியெழுப்ப பயன்படுத்தப் பழகுவதுடன், திரை நேரத்தை மட்டுப்படுத்தி, அந்நேரத்தை தவக்கால பக்திமுயற்சிகளை மேற்கொள்ள பயன்படுத்துவதுடன் அதனை எம் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பதையும் சிறப்பான பரித்தியாகமாக கடைப்பிடிக்கும் படியும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் எமது பிரதேசத்தில் இளையோரை இலக்கு வைத்து போதைப் பொருட்களை விற்பனை செய்வதும், பயன்படுத்துவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் குறிப்பாக கத்தோலிக்கர்கள் செறிவாக வாழும் கரையோரப் பிரதேசங்கள் ஊடாக வியாபாரம் வியாபித்து வருவது வேதனைக்குரிய விடயமென குறிப்பிட்ட ஆயர் அவர்கள் நாம் பொறுப்புள்ள விதத்தில் இத்தீமைகளுக்கு அடிமையானோருக்கு மறுவாழ்வும், விற்பனையில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்தவும் எமது ஒத்துழைப்பை வழங்கி, ஆவன செய்யவேண்டுமெனவும் எடுத்துரைத்துள்ளார்.

சமகால அரசினால் மக்களுக்கு உறுதிமொழிகளுக்கு மேல் உறுதி மொழிகள் வழங்கப்படுகின்றனவே தவிர, எவையும் செயற்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டிய ஆயர் அவர்கள் ஒற்றுமையாக ஒன்றிணைந்து தமிழர் உரிமைக்காகக் குரல் கொடுக்க வேண்டிய எம் தலைமைகள் சுயநலப்போக்குக் கொண்டவர்களாகப் பிளவுபட்டுள்ளமை ஓர் துர்ப்பாக்கிய நிலையெனவும், சமூக நலன் விரும்பிகளும், புத்திஜீவிகளும் தமிழ்த் தலைமைகளுக்குள் ஒற்றுமையைக் உருவாக்க முயலவேண்டியது கட்டாயத் தேவையாகுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

By admin