இலங்கை நாட்டில் நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடை சட்டத்தை இரத்துச்செய்யவும் அதற்கு மாற்றீடான, அரசாங்கத்தை பயங்கரவாதத்திலிருந்து காப்பாற்றும் புதிய சட்ட வரைபினை மீளப்பெறக்கோரியும் வடக்கு கிழக்கின் பல இடங்களிலும் கவனயீர்ப்பு போராட்டங்களும் கையெழுத்து போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக மாசி மாதம் 16ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களால் வடக்கில் இணையவழி கையெழுத்து போராhட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நல்லூர் சிவகுரு ஆதீன தலைவர் தவத்திரு வேலன் சுவாமி, குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. முருகையா கோமகன் மற்றும் அருட்தந்தையர்கள் பங்குபற்றியிருந்தனர்.
இந்நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த குருமுதல்வர் அவர்கள் தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டமும் தேவையில்லை புதிதாக கொண்டுவரப்படவுள்ள சட்டமும் அவசியமில்லையெனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எமது நாட்டில் நீண்டகாலமாக நடைமுறையிலிருந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தமிழ் மக்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்ததுடன் பலரது வாழ்வில் கவலைகளும் வலிகளும் இழப்புக்களும் ஏற்றபட்டதென எடுத்துரைத்த குருமுதல்வர் அவர்கள் இவ்வாறான சட்டமூலத்தை நீக்குமாறு அரசாங்கத்திடம் பலமுறை கோரியும் அதே பாணியில் தற்போது புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தடன், வரவுள்ள புதிய சட்டத்தினால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் பயத்தின் மத்தியிலேயே வாழ வேண்டிய நிலையுள்ளதென குறிப்பிட்ட குருமுதல்வர் அவர்கள் மக்கள் அமைதியாகவும் பயமில்லாமலும் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழக்கூடிய நிலையை ஏற்படுத்த பழைய பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி புதிதாக எந்ந சட்டமூலத்தையும் அறிமுகம் செய்யவேண்டாமெனவும் கோரியுள்ளார்.
இக்கையெழுத்து போராட்டம் திருகோணமலை மாவட்டத்தில் மாசி மாதம் 14ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டதுடன் வருகின்ற 25ஆம் திகதி புதன்கிழமை வரை முன்னெடுக்கப்படவுள்ள இப்போராட்டத்தின் மூலம் சேகரிக்கப்படவுள்ள கையெழுத்துக்கள் இலங்கை நீதியமைச்சுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதுடன் அதன் பிரதிகள் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம், மனித உரிமைகள் பேரவை ஆணையாளர், ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட அனைத்து இராஜதந்திரிகளுக்கும் அனுப்பிவைக்கப்படடவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

