இலங்கை கடற்படையினரால் சுண்டிக்குளம் தொடுவாய் வாய்க்கால் கடற்பகுதியில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட மீனவர்களின் 32ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு மாசி மாதம் 18ஆம் திகதி கடந்த புதன்கிழமை கட்டைக்காட்டில் நடைபெற்றது.
கட்டைக்காடு சென்மேரிஸ் மைதானத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூரும் விதமாக அமைக்கப்படவுள்ள நினைவுத் தூபிக்கான அடிக்கல் நாட்டப்பட்டு தொடர்ந்து இறந்தவர்களுக்கான மலர்மாலை அணிவிக்கப்பட்டு ஈகைச்சுடரேற்றி மலரஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் கட்டைக்காடு பங்குத்தந்தை வசந்தன், அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ரமேஸ், அருட்சகோதரன் ஜெனிஸ்ரன், வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் திரு.சுகிர்தன், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் திரு. யுகதீஸ், காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் திரு. முரளிதரன், சிரேஸ்ட ஊடகவியலாளர் திரு. காண்டிபன், சண்டிலிப்பாய் பிரதேச சபை உப தவிசாளர் திரு. தயாபரன், கிராம அபிவிருத்தி சங்க தலைவர் திரு. வசந்தன், பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினர்கள், பொது மக்களென பலரும் கலந்துகொண்டனர்.
1994ஆம் ஆண்டு இதே நாள் அதிகாலை, சுண்டிக்குளம் தொடுவாய் வாய்க்கால் கடலில் கட்டுமரங்களில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் டோரா படகுகள் மேற்கொண்ட கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் 10 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

