யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியின் 2026,27ஆம் கல்வியாண்டு அங்குரார்ப்பண நிகழ்வு ஜப்பசி மாதம் 01ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி அதிபர் அருட்தந்தை பெற்றூஸ் தயாபரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள் கலந்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
திருப்பலியை தொடர்ந்து கல்லூரியின் அருட்தந்தை ஜோய் கிறிசோஸ்தம் கேட்போர் கூடத்தில் அரங்க நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்நிகழ்வில் கடந்த கல்வியாண்டில் சிறப்பு சித்திபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கல், கல்வியாண்டுக் கால நாட்காட்டி அட்டவணை வெளியீடு, குருத்துவ கல்லூரி மற்றும் புனித சவேரியார் இறையியல் நிறுவனத்தின் கடந்தாண்டு அறிக்கைகள் சமர்ப்பிப்பு, புதிய கல்வியாண்டிற்கான ஆரம்ப விரிவுரை என்பன இடம்பெற்றன.
ஆரம்ப விரிவுரையை ‘அடையாளம் மற்றும் மாண்பை மீட்டெடுக்கும் விடுதலைப் பணி – இலங்கைத் தமிழர்களின் விடுதலைப் போராட்டங்களில் பொருத்தங்கள்’ என்னும் தலைப்பில் குருத்துவக் கல்லூரி அதிபர் அருட்தந்தை பெற்றுஸ் தயாபரன் அவர்கள் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் குருக்கள், துறவிகள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்களென பலரும் கலந்துகொண்டனர்.

