அமலமரித்தியாகிகள் சபையின் நீதி சமாதான நல்லிணக்க பணியகத்தால் முன்னெடுக்கப்பட்ட சர்வதேச அமைதி தின சிறப்பு நிகழ்வு செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி புதன்கிழமை கிளிநொச்சி கனகபுரத்தில் அமைந்துள்ள ஒப்ரெக் வளாகத்தில் நடைபெற்றது.
பணியக இயக்குனர் அருட்தந்தை ஜீவரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்லின நல்லிணக்கத்தை வலியுறுத்தி தமிழ் சிங்கள மொழிகளிலுமான கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் சிபிஆர் நிறுவனத்தின் சமூகப் பணிகள் தொடர்பான விசேட ஆவணக் காணொளியும் காட்சிப்படுத்தப்பட்டது.
அத்துடன் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்களால்; ‘சமாதான பிரகடனம்’ வாசிக்கப்பட்டு உலகளாவிய நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் முகமாக யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்களால் அமைதிப் புறா வானில் பறக்கவிடப்பட்டது.
ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள் பிரதம விருந்தினராகவும் அமலமரித்தியாகிகள் சபை யாழ். மாகாண முதல்வர் அருட்தந்தை போல் ஜெயந்தன் பச்சேக் மற்றும் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் பணியக பயனாளிகள், கிராமிய ஊக்குவிப்பாளர்கள், அரச மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களின் ஊழியர்கள், மதத் தலைவர்கள் எனப் பலரும் பங்குபற்றினர்.

