பளை பங்கின் இத்தாவில் புனித பார்பரா அன்னை ஆலய நூற்றாண்டு திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் ஜோர்ச் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 09ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை அருட்தந்தை துஸ்யந்தன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலி நிறைவில் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபி திறந்து வைக்கப்பட்டதுடன்; ‘ஒரு கிராமத்தின் நூற்றாண்டின் சாட்சி” மலரும் வெளியிட்டுவைக்கப்பட்டது.
யாழ். மறைமாவட்டத்தில் புனித பார்பரா அன்னையின் பெயரில் அமைந்துள்ள ஒரேயொரு ஆலயமாகிய இவ்வாலயத்தின் கட்டுமானப்பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் அப்பணிகளை முன்னெடுப்பதற்கான நிதியனுசரணையை இப்பங்கு மக்கள் நல் உள்ளம் கொண்டவர்களிடம் எதிர்ப்பார்த்து நிற்பதாகவும் பங்குத்தந்தை அவர்கள் தெரிவித்துள்ளார்.

