செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியும், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா நீதிமன்றத்தில் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டமும் பேரணியும் நவம்பர் மாதம் 17ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் அரியாலை தபால்கட்டைச் சந்திக்கு அருகில் ஆரம்பமான போராட்டம், பேரணியாகச் செம்மணி சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழியை சென்றடைந்தது.
இப்போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வு தொடர்பில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா மற்றும் தொல்லியலாளர் அனுஸா வன்னிநாயக்கே ஆகியோர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மூன்றாவது இடைக்கால அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள சில கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
குறித்த அறிக்கையில், புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவு காரணமாக உயிரிழந்தவர்களுடையதாக இருக்கலாம் என்ற அவர்களின் கருத்து தொடர்பாக போராட்டக்காரர்கள் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
செம்மணி மனித புதைகுழியில் பெருந்தொகையான மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் அடையாளம் மற்றும் மரணத்திற்கான காரணங்கள் தொடர்பில் முழுமையான சர்வதேச விசாரணைகள் அவசியமென போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
சர்வதேச அங்கீகாரம் பெற்ற தடயவியல் நிபுணர்கள் மற்றும் மனித உரிமை நிபுணர்கள் அடங்கிய சுயாதீன சர்வதேசக் குழுவின் பங்கேற்புடன் அகழ்வாய்வுகள் முன்னெடுக்கப்படுவதுடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடமிருந்து பெறப்படும் டி.என்.ஏ மாதிரிகள் ஊடாக மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட வேண்டுமெனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

