யாழ்ப்பாணம், கிழக்கு அரியாலை, பூம்புகார் கிராமத்தில் நலிவுற்ற குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், அமலமரித்தியாகிகள் சபையின் யாழ். மாகாண அமதிகள் குடும்பப் பணியகத்தினால் சுயதொழில் பயிற்சிகளும் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கடந்த ஓராண்டாக நடைபெற்றுவரும் மெழுகுதிரி உற்பத்தித் திட்டத்தில் இணைந்துள்ள குடும்பங்கள் மாதாந்தம் சுமார் 6,500 மெழுகுதிரிகளை உற்பத்தி செய்து தமது வருமானத்தைப் பெற்றுக்கொள்கின்றனர்.
இக்குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், அவர்களால் உற்பத்தி செய்யப்படும் மெழுகுதிரிகளைக் கொள்வனவு செய்வதுடன், இத்தகவலை ஏனையோருடன் பகிர்ந்து, அவர்களின் உற்பத்திளை இன்னும் அதிகரிக்க உதவிபுரியும்படி யாழ். மாகாண அமதிகள் குடும்பப் பணியகத்தின் இணைப்பாளர் அருட்தந்தை ஸ்ரனி அன்ரனி அவர்கள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
நலிவுற்ற குடும்பங்களின் நல்வாழ்வுக்காகத் தம்மை அர்ப்பணித்த சபையின் நிறுவுநரான புனித இயூஜின் டி மசனட் அவர்களின் ஆசீருடன், யாழ். மாகாண அமதிகள் குடும்பப் பணியகம் கடந்த ஆறு ஆண்டுகளாக நலிவுற்ற குடும்பங்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
