40 ஆவது அகில இலங்கை தேசிய விளையாட்டு போட்டிகளின் காற்பந்தாட்டப் போட்டிகள் ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி முதல் 05ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 16 வயதுக்குட்பட்ட அணி மாவனல்ல பதூரியா மத்திய கல்லூரியை சமநிலை ஆட்டத்தில் 02:01 என்ற கோல் கணக்கில் வென்று அகில இலங்கை சம்பியன் பட்டத்தை கைப்பற்றியதுடன் கல்லூரியின் 18 வயதுப் பிரிவு அணி புத்தளம் வேற்றாலை அஸேன்கூடூஸ் முஸ்லீம் வித்தியாலயத்தை சமநிலை தவிர்ப்பு ஆட்டத்தில் 05:04 என்ற கோல் கணக்கில் வென்று அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.
இப்போட்டியில் வெற்றிபெற்ற யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்களுக்கான கௌரவிப்பு ஒக்டோபர் மாதம் 08ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் மாணவர்கள் பாண்ட் வாத்தியத்துடன் பற்றிக்ஸ் பாங்ஸால் வீதி சந்தியிலிருந்து பாடசாலைக்கு அழைத்துவரப்பட்டனர்.
தொடர்ந்து பாடசாலை மண்டபத்தில் அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் வாழ்த்துரைகள், கௌரவிப்புக்களுடன் மாணவர்களுக்கான சான்றிதழ்கள், பதக்கங்கள், காலணி என்பன வழங்கிவைக்கப்கட்டன.
காலணிகளுக்கான நிதியனுசரணையை கல்லூரியின் பழைய மாணவர்கள் வழங்கினர்.
யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்கள் பிரதம விருந்தினராகவும் வட மாகாண உதவிக்கல்வி பணிப்பாளர் திரு. ராஜசீலன் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாநகர சபை பிரதி மேயர் கௌரவ இம்மானுவேல் தயாளன், பெற்றோர், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்களென பலரும் கலந்துகொண்டனர்.

