கண்டி அம்பிட்டிய தேசிய குருமட 2026,27ஆம் கல்வியாண்டு அங்குரார்ப்பண நிகழ்வு ஜப்பசி மாதம் 01ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி அதிபர் அருட்தந்தை குயின்ரஸ் பெர்னான்டோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதி பேரருட்தந்தை அன்ட்ரே ஜொஸ்வோவிஜ் அவர்கள் கலந்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

திருப்பலியை தொடர்ந்து கல்லூரியின் சக்கெட் கேட்போர் கூடத்தில் அரங்க நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில் கடந்த கல்வியாண்டில் சிறப்பு சித்திபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கல், இணையவழி கற்றல் மேலாண்மை அமைப்பு (LMS) அறிமுகம், கல்லூரியின் கடந்தாண்டு அறிக்கை சமர்ப்பிப்பு, புதிய கல்வியாண்டிற்கான ஆரம்ப விரிவுரை என்பன இடம்பெற்றன.

ஆரம்ப விரிவுரையை ‘குருமட மாணவர்களின் உருவாக்கத்தில் கூட்டொருங்கியக்க திரு அவையின் பங்கு’ என்னும் தலைப்பில் உலக இரட்சகர் சபை அருட்தந்தை விமல் திரிமன அவர்கள் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் குருக்கள், துறவிகள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்களென பலரும் கலந்துகொண்டனர்.

இக்குருத்துவ கல்லூரியில் மறைமாவட்ட மற்றும் துறவற சபைகளை சேர்ந்த 272 மாணவர்கள் கல்வி பயில்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin