யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள், புரட்டாதி மாதம் 30ஆம் திகதி புதன்கிழமை உருத்திரபுரம், கோணாவில் மற்றும் தர்மபுரம் பகுதிகளுக்கு விஜயம் செய்து, அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகளை சந்தித்து, அப்பகுதி மக்களின் தேவைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.

உருத்திரபுரம் பங்கில், பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் கனிசியஸ் அவர்களை சந்தித்த ஆயர், பங்கின் மேய்ப்புப்பணி தேவைகள் தொடர்பில் கலந்துரையாடினார். தொடர்ந்து, திருக்குடும்ப அருட்சகோதரிகளை சந்தித்து, அவர்களின் பணிகள் குறித்தும் கலந்துரையாடினார்.

பின்னர், அருட்தந்தை ஜோன் கனிசியஸ் மற்றும் திருக்குடும்ப அருட்சகோதரிகளுடன் கோணாவில் ஆலயத்திற்கு விஜயம் செய்த ஆயர், ஆலயத்தின் தேவைகள் மற்றும் அப்பகுதி மக்களின் தேவைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.

இதனைத் தொடர்ந்து, ஆரோபணம் சிறுவர் இல்லத்திற்கும் விஜயம் செய்த ஆயர், இல்லத்தின் இயக்குநரை சந்தித்து, இல்லத்தின் தேவைகள் மற்றும் சிறார்களின் நலன் தொடர்பில் கலந்துரையாடினார்.

பின்னர் தர்மபுரத்திற்கு விஜயம் செய்து பங்குத்தந்தை அருட்தந்தை றேமன்ட் றெனால்ட் அவர்களை சந்தித்து, பங்கின் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.

தொடர்ந்து, அருட்தந்தை றெனால்ட் அவர்களுடன் அங்கு பணியாற்றும் வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகளை சந்தித்து, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை கேட்டறிந்ததுடன், அவர்களின் அர்ப்பணிப்பான பணியைத் தொடர்ந்து முன்னெடுக்க ஊக்கமளித்தார்.

By admin