மானிப்பாய் பங்கின் புதுமடம் கர்த்தர் ஆலயம் மற்றும் புனித அன்னாள் ஆலயம் ஆகியவற்றில் தேசிய மறைக்கல்வி வார சிறப்பு நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன.
மானிப்பாய் புதுமடம் கர்த்தர் ஆலயத்தில் பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை இடம்பெற்ற இந்நிகழ்வின் முதல்நாளில் சிரமதானமும், இரண்டாம் நாளில் கட்டுரை, செபமாலை ஆக்கம், வினாவிடை போட்டிகளும் இறுதி நாளன்று திருப்பலி, விலிலிய விளையாட்டுக்கள், கலை நிகழ்வுகள், பரிசளிப்பு, அன்பிய விருந்து என்பனவும் நடைபெற்றன.
மானிப்பாய் புனித அன்னாள் ஆலயத்தில் அருட்சகோதரி ஜெயந்தி அவர்களின் உதவியுடன் புரட்டாதி மாதம் 13ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை இடம்பெற்ற நிகழ்வில் திருப்பலிகள், மானிப்பாய் திருக்குடும்ப கன்னியர் மடத்தில் சிரமதானம், தீப்பாசறை, ஆலய வளாக துப்புரவாக்கம், என்பன நடைபெற்றன.
இறுதிநாளன்று சிறப்பு திருப்பலியும் திருப்பலி நிறைவில் மாணவர்களின் படைப்புக்களை தாங்கிய ‘மானி அன்னாளின் மறை மொட்டுக்கள்’ கையெழுத்து சஞ்சிகை வெளியீடும் நடைபெற்றதுடன் சஞ்சிகையின் ஆய்வுரையை மாதகல் சென் ஜோசப் கல்லூரி அதிபர் திருமதி தர்மினி பாலேந்திரன் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்வில் மறைக்கல்வி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

