ஒரு யுத்தத்தின் ஆரம்பம் ஒரு மனிதனின் மனம். மனதில் உண்டாகும் யுத்தம் குடும்பம் சமுகம் நாடு உலகமென பரந்து விரிந்து உலகில் அழிவுகளை ஏற்படுத்துகின்றது. இவ் அழிவுகளை நிறுத்தி உலகில் அமைதியை ஏற்படுத்த மனமாற்றம் முக்கியமானதெனவும் இம்மாற்றத்திற்காக அனைவரும் மரியன்னை உலகிற்குதந்த வலிமையான ஆயுதமாகிய செபமாலையை கரத்தினிலேந்தி திருத்தந்தையுடன் இணைந்து செபிக்கவேண்டுமெனவும் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள் அழைப்புவிடுத்துள்ளார்.
யாழ். கோவில் வீதியில் அமைந்துள்ள அருள் ஆச்சிரமத்தில் ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி கடந்த புதன்கிழமை செபமாலைதாசர் சபையினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற புனித செபமாலை அன்னை திருவிழா திருப்பலியில் ஆற்றிய மறையுரையிலேயே ஆயர் அவர்கள் மேற்கண்டவாறு அழைப்புவிடுத்து உலகில் எங்கும் வியாபித்து அழிவுகளை உண்டாக்கும் மனித யுத்தத்தை வெற்றிகொள்ள செபமாலையை ஏந்தியவர்களாக நாம் அனைவரும் ஆன்மீக யுத்ததில் ஈடுபட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
திருப்பலி ஆரம்பத்தில் திருத்தந்தையின் வேண்டுகோளின் படி ஒரு மில்லியன் சிறுவர்கள் திருச்செபமாலை சொல்ல வேண்டும் என்ற கருத்துக்கு ஏற்ப ஆயர் அவர்களுடன் இணைந்த சிறப்பு செபமாலை இடம்பெற்றது.
தொடர்ந்து யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்களின் தலைமையில் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இத்திருப்பலியில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட், நிதி முகாமையாளர் அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்து செபித்தனர்.

