பண்பாட்டுமயமாக்கலை ஊக்குவித்த இந்தியாவைச் சேர்ந்த மறைந்த அருட்தந்தை சைமன் அமலோற்பவதாஸ் அவர்களைப் புனிதராக உயர்த்துவதற்கான நடைமுறைகளை ஆரம்பிக்க வத்திக்கான் அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பைப் பாண்டிச்சேரி – கடலூர் உயர்மறைமாவட்டப் பேராயர் பேரருட்தந்தை பிரான்சிஸ் கலிஸ்ட் அவர்கள் தனது ஆலோசனைக் குழுக் கூட்டத்தின்போது வெளியிட்டுள்ளார்.
1932ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பிறந்த அருட்தந்தை சைமன் அமலோற்பவதாஸ் அவர்கள், தற்போது ‘இறைவனின் ஊழியர்’ என்ற திருச்சபை அங்கீகாரப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
இந்தியக் கத்தோலிக்கர்கள் உண்மையான கிறிஸ்தவர்களாக வாழ்வதற்கு ஐரோப்பியக் கலாசாரத்தைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்ற உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருந்த இவர், பெங்க;ரில் அமைந்துள்ள தேசிய விவிலிய, மறைக்கல்வி மற்றும் வழிபாட்டு மையத்தின் நிறுவனராக விளங்கினார்.
கத்தோலிக்கத் திருவழிபாட்டில் இந்தியப் பண்பாட்டுக் கூறுகளான பாரம்பரிய இசை, விளக்குகள், மலர்கள் மற்றும் இந்திய மரபுகளுக்கு உரிய வழிபாட்டு முறைகளைப் பயன்படுத்துவதையும் இவர் ஊக்குவித்தார்.
ஆரம்பத்தில் இவரது இத்தகைய முன்னெடுப்புகள் கிறிஸ்தவ அடையாளத்தைப் பலவீனப்படுத்தக்கூடும் எனச் சிலர் கருதியபோதிலும், இந்தியப் பண்பாட்டுடன் இணைந்த கிறிஸ்தவ வாழ்வின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் முயற்சியாகப் பலரால் வரவேற்கப்பட்டன.

