யாழ். நவாலி புனித பேதுருவானவர் ஆலயத்தின் மீது இலங்கை அரச விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 28ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உணர்வுபூர்வமான முறையில் அங்கு முன்னெடுக்கப்பட்டது.
பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அருட்தந்தை ரவிறாஜ் அவர்களின் தலைமையில் நினைவுத் திருப்பலியும் தொடர்ந்து நினைவுத்தூபி அமைந்துள்ள இடத்தில் அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றன. 1995ஆம் ஆண்டு இராணுவத்தினரின் படை நடவடிக்கையால் வலிகாமம் பிரதேச மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகளிலும் ஆலயங்களிலும் தஞ்சமடைந்திருந்தனர்.
இந்நிலையில் நவாலி புனித பேதுருவானவர் ஆலயத்திலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் தஞ்சமடைந்திருந்த ஆயிரக்கணக்கான மக்களை இலக்குவைத்து இலங்கை விமானப்படையினரால் பயங்கரவாத குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இத்தாக்குதலில் ஆலயத்திலிருந்த குழந்தைகள் பெண்கள் உட்பட 147க்கும் அதிகமான பொதுமக்கள்படுகொலை செய்யப்பட்டதுடன் 400க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்திருந்திருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin