புலம்பெயர் தமிழ் கத்தோலிக்க மக்களால்முன்னெடுக்கப்பட்ட பிரித்தானியா வோல்சிங்ஹாம் அன்னையின் திருத்தலம் நோக்கிய இரண்டாவது திருயாத்திரை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 
பிரித்தானியா தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் ஏற்பாட்டில் பணியக இயக்குனர் அருட்தந்தை எல்மோ அருள்நேசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற திருயாத்திரை நிகழ்வில்அன்று காலை ஆயர்அவர்களினால் அன்னையின் கொடி ஏற்றிவைக்கப்பட்டு காலை புகழ்ச்சியும், அன்னை மரியாளின் திருச்செபமாலைத் தியானமும்
இடம்பெற்றதுடன் அருட்தந்தை எல்மோ அருள்நேசன் அவர்களின் தலைமையில் நற்கருணை வழிபாடு முன்னெடுக்கப்பட்டு அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களால் நற்கருணை ஆசீர்வாதம் வழங்கிவைக்கப்பட்டது.
 
தொடர்ந்து மதியம் 12 மணியளவில் யாழ். மறைமாவட்ட ஆயர் அவர்களின் தலைமையில் திருநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சூரூப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் புலம்பெயர் நாடுகளிலிருந்து ஏராளமான அன்னையின் பக்தர்கள்பங்குபற்றி அன்னையின் ஆசீரை பெற்றுச்சென்றனர்.
 
மேலும் யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் 75 ஆவது பிறந்ததினத்தை சிறப்பிக்கும் முகமாக பிரித்தானிய தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கௌரவிப்பும் கலைநிகழ்வுகளும் வெம்லி கிரிஸ்டல் மண்டபத்தில் அன்று மாலை இடம்பெற்றது.
 
பிரித்தானியா வாழ் இலங்கை தமிழ் கத்தோலிக்க புலம்பெயர் தமிழர்களினால் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் குருக்கள், துறவிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு ஆயருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

By admin