இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட மே தின பேரணி கடந்த 01ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
நல்லூரிலிருந்து ஆரம்பமாகிய இப்பேரணி கிட்டு பூங்காவை அடைந்து அங்கு இடம்பெற்ற பொதுக்கூட்டத்துடன் நிறைவடைந்தது.
அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கு, அதிபர், ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பதவி உயர்வு மற்றும் தடைதாண்டல் தாமதங்களுக்கு தீர்வை வழங்கு, ஆசிரியர்களுக்கான வினைத்திறன் தடைதாண்டல் இதவடிவம் மற்றும் தொழில்வாண்மை பிரச்சினைகளுக்கு இவ்வருட இறுதிவரை இடைக்கால தீர்வை வழங்கு, சகல பாடசாலை மாணவர்களுக்குமான போசாக்கு நிலையை உறுதிப்படுத்து, மலையக மக்களின் கல்வி அபிவிருத்திக்கான செயற்பாடுகளை துரிதப்படுத்து, கடற்தொழிலாளர் மற்றும் விவசாயிகள் முகங்கொடுக்கும் பிரச்சிகைளுக்கு தீர்வு வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்து, பயங்கரவாத தடைச்சட்டம், நிகழ்நிலைக் காப்பு சட்டம் உள்ளிட்ட அடக்குமுறை சட்டமூலங்களை நீக்கு, தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக இறைமை, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஸ்டி அடிப்படையிலான தீர்வை வழங்கு, கல்வி மற்றும் அரச சொத்துக்களை தனியார் நிறுவனங்களுக்கு விற்கும் முயற்சிகளை நிறுத்து போன்ற கோசங்கள் இப்பேரணியில் எழுப்பப்பட்டதுடன் இப்பேரணியில் இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், அதிபர்கள், ஆசிரியர்களென 600 வரையானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.