கடந்த ஒக்டோபர் மாதம் 10ம் திகதி ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் வத்திக்கானிலுள்ள புனித பேதுரு பேராலயத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட 2023ம் ஆண்டு நிறைவுபெறவுள்ள உலக ஆயர்கள் மாமன்றத்திற்கான தலத் திரு அவைகளின் தயாரிப்புச் செயற்பாடுகள் 17ம் திகதி ஞாயிறன்று யாழ். மரியன்னை பேராலயத்தில் ஆயர் பேரருட்திரு. ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களால் திருப்பலி ஒப்புக்கொடுத்து ஆரம்பித்து வைக்கப்பட்டன. “கூட்டொருங்கியக்கத் திரு அவையாகப் பயணிப்போம்” என்ற கருப்பொருளில் நடைபெறவுள்ள இந்த ஆயர்கள் மாமன்றத்தின் ஆரம்ப நிகழ்வில் யாழ். மறைமாவட்டக் குருமுதல்வரோடு, ஆறு மறைக்கோட்டங்களின் குருமுதல்வர்களும், குருக்களின் பிரதிநிதிகளும், இருபால் துறவற சபைகளின் பிரதிநிதிகளும், பொதுநிலையினரின் பிரதிநிதிகளும் பங்குபற்றினார்கள்.

ஓன்றிப்பை நோக்கிய எமது விசுவாசப் பயணம் எமது திருமுழுக்கோடு ஆரம்பமாகிறது என்பதன் அடையாளமாக திருப்பலி திருமுழுக்குத் தொட்டியின் முன் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் பவனியாக திருப்பீடம் சென்று ஒப்புக்கொடுக்கப்பட்டது. திருப்பலியின் நிறைவில் யாழ் மறைமாவட்ட ஆயர் அவர்களினால் இம்மாமன்றத்திற்கான பிரகடனம் வாசிக்கப்பட்டதுடன் யாழ். மறைமாவட்டம் முழுவதும் தயாரிப்புப் பணிகளை ஆரம்பிக்கும் அடையாளங்களாக மாமன்றம் பற்றிய விழிப்புணர்வு பதாதைகளும், எரியும் விளக்குகளும் ஆறு மறைக்கோட்டங்களின் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டு அனுப்பிவைக்கப்படும் நிகழ்வும் இடம்பெற்றது.யாழ். மறைமாவட்டத்தில் இம் மாமன்ற தயாரிப்புப் பணிகளுக்குப் பொறுப்பாக இருந்து செயற்படுகின்ற குருக்கள், துறவியர், நிரந்தர மறை ஆசிரியர்கள், பொதுநிலையினர் அடங்கிய செயற்குழு உறுப்பினர் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்கள். மேற்படி நிகழ்வுகள் அனைத்தும் தொலைக்காட்சி, இணையத்தளங்கள் வழியாக நேரடியாக ஒளிபரப்பபட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin