யாழ்ப்பணம் புனித அடைக்கல அன்னை ஆலயத்திருவிழா, புனித கன்னிமரியாவின் பிறப்புப் விழாகிய 08.09.2021 கடந்த புதன்கிழமை அன்று யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி அன்னையின் கொடியேற்றததுடன் ஆரம்hமாகிய நவநாள் வழிபாடுகள் தினமும் மாலை 5.00 மணிக்கு அங்கு இடம்பெற்றது. திருநாளுக்கு முதல் நாள் நற்கருணை ஆராதனை திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு. ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். ஆயர் தலைமையில் நடைபெற்ற திருநாள் திருப்பலியை தொடர்ந்து புனித அடைக்கல அன்னையின் திருச்சொரூப ஆசீர் இடம்பெற்றதுடன் அன்னையின் பிறப்பு நாள் திருவிழா, போர்த்துக்கேயர் காலத்திலிருந்து யாழ்ப்பாணத்தில் கொண்டாடத் தொடங்கியதன் 400 வது யூபிலி ஆண்டை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வும் இடம்பெற்றது.

போர்த்துக்கேயரின் ஆட்சிக்காலத்தில் வடக்கிலங்கையில் கத்தோலிக்கத்திற்கு சான்றுபகர்ந்த பிரதான ஆலயங்களுள் யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயமும் ஒன்றாகும். 1622 செப்டெம்பர் 08 ஆம் திகதி யாழ்ப்பாண இராட்சியத்தை அடைக்கல அன்னையின் பாதுகாவலில் ஒப்புக்கொடுத்து அன்னை மரியாளின் பிறப்பு விழாவை இப்பதியின் பெருவிழாவாக போர்த்துக்கேய அரசும் திருஅவையும் கொண்டாடினர். அதன் தொடர்ச்சியாக கொண்டாடப்பட்டு வந்த இவ்விழா 399 ஆண்டாக இவ்வருடம் சிறப்பிக்கப்பட்டதுடன் வருகின்ற வருடம் 400வது யூபிலி ஆண்டாக கொண்டாடப்படவுள்ளது.இவ்வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை நினைவுகூரும் முகமாக யாழ். மறைமாவட்ட ஆயர் யூபிலி கொடியை ஆசீர்வதித்து ஏற்றி வைத்து, பங்கு மக்களும் மற்றும் அனைத்து இறைமக்களும் இணைந்து தேவையான ஆன்மீக ஆயத்தங்களுடன் எதிர்வரும் 2022ம் ஆண்டு செப்ரெம்பர் 8ம் நாள் மாபெரும் யூபிலி விழாவாக இவ்விழாவைக் கொண்டாட அழைப்பு விடுத்தார்.ஆடைக்கல அன்னை ஆலய பங்குத்தந்தை அருட்திரு அன்ரனிதாஸ் அவர்களின் ஒழங்குபடுத்தலில் கொவிட்-19 பெருந்தொற்று சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வுகள் அனைத்தும் HOLY MARY தொலைக்காட்சியூடாக நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டதுடன் உள்நாட்டிலும் புலம்பெயர் தோசத்திலும் வாழ்ந்துவரும் பல்லாயிரக்கணக்கானோர் இதில் இணைந்து அன்னையின் ஆசீரை பெற்றுக்கொண்டனர்.

By admin