மன்னார் மறைமாவட்டம் தனி மறைமாவட்டமாக உதயமானதன் 45ஆம் ஆண்டு நிறைவுநாள் நிகழ்வு தை மாதம் 24ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் தோட்டவெளி – வேதசாட்சிகளின் இராக்கினி திருத்தலத்தில் நடைபெற்றது.
மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நன்றித்திருப்பலி, நூல் வெளியீடு, அன்னைக்கு முடி சூட்டும் நிகழ்வு என்பன நடைபெற்றன.
திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்ததுடன் இலங்கை ஆயர்கள் மன்ற தலைவரும் குருநாகல் மறைமாவட்ட ஆயருமான பேரருட்தந்தை ஹெரல்ட் அன்ரனி பெரேரா, பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம், மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னான்டோ ஆகியோரும் இணைந்து செபித்தனர்.
திருப்பலி நிறைவில் யாழ். மறைமாவட்ட குருவும் வாழ்நாள் பேராசிரியருமான அருட்தந்தை ஞானமுத்து பிலேந்திரன் அவர்களின் “மடுமாதா திருத்தலத்தின் வரலாறு” நூல் வெளியீடு இடம்பெற்றதுடன் வேதசாட்சிகளின் இராக்கினி அன்னைக்கு முடிசூட்டும் நிகழ்வும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், வன்னி பாராளுமன்ற உறுப்பினர், அரச அரச சார்பற்ற உத்தியோகத்தர்கள், இறைமக்களென ஏராளமானவர்கள் கலந்துசெபித்தனர்.

