இளவாலை திருமறைக்கலாமன்றத்தின் மன்றதினம் மற்றும் பொங்கல் விழா நிகழ்வுகள் தை மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இளவாலையில் நடைபெற்றன.
மன்ற இணைப்பாளர் திரு. பியன்வெனு அவர்களின் ஒழுங்குபடுத்தலில் திரு. பயஸ் ஜெனோசன் அவர்களின் தலைமையில் கலைத்தூது கலைக்களரியில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொங்கல் வழிபாடு, கலைநிகழ்வுகள், நத்தார் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு, தேசிய ரீதியில் புத்தசாசன அமைச்சினால் கலாச்சார மத்திய நிலையங்களுக்கிடையே நடாத்தப்பட்ட மூத்த பிரஜைகளுக்கான கூத்துப்போட்டி, மாணவர்களுக்கான பண்ணிசை மற்றும் நாடக பாடல் போட்டியில் சண்டிலிப்பாய் காலசார மத்தியநிலையம் சார்பாக இரண்டாமிடங்களை பெற்றுக்கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கல் ஆகியவற்றுடன் நினைவுரையும் இடம்பெற்றது.
அருட்தந்தை அமரர் மரியசேவியர் அடிகளாரின் வாழ்வும் பணியும் பற்றிய நினைவுரையை ஆசிரியரும் திருமறைக்கலாமன்ற நிர்வாக உறுப்பினருமான திரு. ஜெயகாந்தன் அவர்கள் வழங்கினார்.
கலை நிகழ்வுகளில் நடனங்கள், பாடல், கவியரங்கு, புத்தாக்க நடனம், தென்மோடி சிந்துநடை பாடல்களின் சங்கமம் என்பவற்றுடன் சிறப்பு நிகழ்வாக இளவாலை திருமறைக்கலாமன்ற கலைஞர்களினால் ‘கருவா? கல்வியா?’ நாடகமும் மேடையேற்றப்பட்டன.
இந்நாடகம் தேசிய ரீதியில் நடைபெற்ற அரச உத்தியோகத்தர்களுக்கான நாடக போட்டியில் இரண்டு தேசிய விருதுகளையும் ஐந்து துறைகளுக்கான திறமை சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டது.
இந்நிகழ்வில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் காரைநகர் பிரதேச சபை செயலாளர் திரு. சுதர்சன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டதுடன் இளவாலை திருக்குடும்ப கன்னியர் மட மகாவித்தியாலய அதிபர் அருட்சகோதரி அமிர்தா அவர்கள் ஆசியுரையையும் வழங்கியிருந்தார்

