கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டாடும் எமக்கு, இலங்கையில், அண்மையில் நடைபெற்ற இயற்கை அனர்த்தம் பெரும் துன்பியல் அனுபவத்தை தந்தாலும், மனுவுருவேற்பின் மறைபொருளையும், பகிர்தலினால் பிறக்கும் பெரும் மகிழ்வையும் அதிகமாக உணர்ந்துகொள்ளும் வாய்ப்பினையும் ஏற்படுத்திதந்துள்ளதென யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் வழங்கிய கிறிஸ்மஸ் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இயற்கை பேரிடரில் கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள், அங்கவீனமானவர்கள், வீடிழந்தோர், சொத்திழந்தோரென துன்பப் பட்டியல் நீண்டுசெல்லும் இந்நாட்களில், கிறிஸ்து பிறப்பு, கடவுள் நம்முடன் இருக்கின்றார் என்ற உண்மையை வலியுறுத்தி, இறை பலத்தோடு துன்பங்களை தாண்டிச்செல்ல நம்பிக்கை தருகின்றதெனவும் ஆயர் அவர்கள் எடுத்துரைத்துரைத்துள்ளார்.
அத்துடன் பேரிடர், அதனால் ஏற்படும் துன்பங்கள், வலிகள், இழப்புக்கள், இடப்பெயர்வுகள் போன்றவை, தமிழ் மக்களுக்கு புதியவையல்லவென சுட்டிக்காட்டிய ஆயர் அவர்கள், கடந்த காலங்களில் இவைகள் எல்லாவற்றையும் தமது வாழ்வியலுக்குள் கரைத்துக்கொண்ட தமிழ் மக்கள் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வலிகளை உடனடியாக உணர்ந்துகொண்டு தன்னார்வத் தொண்டர்களாக உதவிக்கரம் நீட்டி விரைந்து செயல்பட்டார்களெனவும் பேரிடர் காலத்தில் மக்கள் ஒருவரை ஒருவர் தாங்கிக்கொண்டு தங்களிடம் உள்ளதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டவிதம் குறிப்பாக யாழ். மறைமாவட்ட குருக்கள், துறவிகள், இறைமக்களின் இப்பணி இறை பிரசன்னத்துடன் இணைந்த மனித நேயத்தின் உயர் வெளிப்பாடாக அமைந்துள்ளதெனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கை நாடு, சிங்கள பௌத்த பேரினவாதம், உள்நாட்டு யுத்தம், பொருளாதர சிக்கல், ஆட்சி மாற்றம், இயற்கை பேரிடர், பூகோள அரசியல் மாற்றத்தால் ஏற்படும் சர்வதேசத்தலையீடு, போன்றவற்றை ஊடறுத்து நகர்ந்துகொண்டிருக்கும் சூழலில் தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்வதிலுள்ள காலதாமதம் தமிழ் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுப்பதை சுட்டிக்காட்டிய ஆயர் அவர்கள் பேரிடரில் வெளிப்பட்ட மனிதநேயம், இலங்கை நாட்டில், நிரந்தரமாக குடியிருக்க, தற்போதைய அரசு விரைந்து செயல்பட்டு இனப்பிரச்சனைக்கான நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டுமெனவும் வன்முறை தவிர்த்து, சரியான புரிதலோடு அகிம்சை வழியில் பாலக இயேசு கொணர்ந்த நிரந்தர அமைதியை ஏற்படுத்த அனைவரும் ஒன்றிணைவோமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
