தேசிய கத்தோலிக்க ஆயர் பேரவை அங்கீகாரத்துடன் தேசிய கத்தோலிக்க ஊடக நிலையமும் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்திய தர்மபிரபாஸ்வர விருது வழங்கும் நிகழ்வு மார்கழி மாதம் 15ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திருமதி சதுரி பிந்து மற்றும் தேசிய கத்தோலிக்க வெகுசன ஊடக நிலைய இயக்குனர் அருட்தந்தை யூட் கிறிசாந்த ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இரத்தினபுரி மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் வைமன் குருஸ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து நிகழ்வை சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் தேசிய ரீதியாகவும் மறைமாவட்டங்கள் ரீதியாகவும் பல்வேறு துறைகளை சேர்ந்த 40 கலைஞர்கள் தெரிவுசெய்யப்பட்டு விருதுவழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
யாழ். மறைமாவட்டத்திலிருந்து நாடகத்துறையில் யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தை சேர்ந்த திரு. அன்று யூலியஸ் நாயகம், புலோப்பளை பங்கை சேர்ந்த திரு. மிக்கேல் அலேஸ், இலக்கியதுறையில சக்கோட்டை பங்கைச்சேர்ந்த திரு. இராயப்பு திருத்துவறாஜா ஆகிய மூவரும் மன்னார் மறைமாவட்டத்திலிருந்து எழுத்துத் துறையில் வங்காலை புனித ஆனாள் பங்கைச் சேர்ந்த திருமதி பெப்பி விக்ரர் லெம்பேட், நாடகத்துறையில் பேசாலை புனித வெற்றிநாயகி அன்னை பங்கைச் சேர்ந்த திரு. துரம், சிற்பம் மற்றும் செதுக்கல் துறையில் வங்காலை புனித ஆனாள் பங்கைச் சேர்ந்த திரு. ஜெரோமி மார்க், ஊடகத்துறையில் பேசாலை புனித வெற்றிநாயகி அன்னை பங்கைச் சேர்ந்த திரு. லோறன்ஸ் கொன்சால் வாஸ் கூஞ்ஞ ஆகிய நால்வரும் திருகோணமலை மறைமாவட்டத்திலிருந்து புகைப்பட துறையில் திரு. பெஞ்சமின் அவர்களும் மட்டக்களப்பு மறைமாவட்டத்திலிருந்து கிறிஸ்தவ இலக்கிய துறையில் புனித காணிக்கை அன்னை ஆலய பங்கை சேர்ந்த திரு. மைக்கேல் கொலின், எழுத்துத்துறையில் அருளானந்தன் கேப்ரியல் கென்டியன் ஆகிய இருவரும் இவ்விருதுகளை பெற்றுக்கொண்டார்கள்.
2018ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இவ்விருது வழங்கும் நிகழ்வு ஜந்தாவது தடவையாக இவ்வருடமும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் மறைமாவட்ட பங்குகள் ரீதியாக பல் துறைகளிலும் பணியாற்றும் கலைஞர்களை கௌரவித்து அவர்களின் பணியின் பெருமைகளை வெளிக்கொணர்வதாக அமைந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

