இலங்கை நாட்டை உலுக்கிய டிட்வா புயலால் பாதிக்கப்படாத மக்கள் உதவிக் கரம் நீட்டி, பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க முன்வர வேண்டுமென மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் வெளியிட்டுள்ள திருவருகைக்கால சுற்றுமடலில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இயேசுவின் பிரசன்னத்தையும் உடனிருப்பையும் ஆழமாக உணரும் இத்திருவருகைக்காலத்தில் ‘கடவுள் நம்மோடு இருக்கின்றார்’ என்ற ஆறுதலின் செய்தியை தனது பிறப்பின் மூலம் இறைமகன் இயேசு மீளவும் இந்நாட்களில் நமக்கு வலியுறுத்துகின்றாரென எடுத்துரைத்துள்ள ஆயர் அவர்கள் இறைமகன் இயேசுவின் வருகைக்கு நம்மை தகுந்த முறையில் ஆயத்தம் செய்வோமெனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன் டிட்வா புயலின் தாக்கத்தால் உயிர் இழப்பு, பொருள் இழப்பு, கால்நடை இறப்பு, விளைநில அழிவுகள் ஏற்பட்டதுடன் பலர் அகதிகளாக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில் நிவாரண நடவடிக்கைகள் அரசினாலும் மன்னார் மறைமாவாட்ட திருச்சபையாலும் பொது அமைப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என குறிப்பிட்டுள்ள ஆயர் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்களுக்கான முழுமையான இழப்பீடுகள் வழங்கப்பட்டு, மக்கள் தம் இயல்பு வாழ்க்கைக்கு விரைவில் திரும்ப அனைவரும் ஒன்றிணைந்து செபிப்போமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் புதிய அரசாங்கம் ஊழல்களை ஒழிக்கவும், போதைப்பொருளை கட்டுப்படுத்தவும், பொருளாதரத்தை உறுதியாக்கவும் எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியதாக இருந்தாலும் தமிழர் நில அபகரிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, இறுதிப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கான பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணை, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற விடயங்களில் இந்த அரசாங்கம் இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவில்லையென்ற தனது கவலையையும் வெளிப்படுத்தியுள்ளார்.
