2025 யூபிலி ஆண்டு யாழ். மறைமாவட்ட தலத்திரு அவைகளில் மார்கழி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருக்குடும்ப பெருவிழாவுடன் நிறைவுக்கு கொண்டுவரப்படவுள்ளதென யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு யூபிலி கதவு ஆயர் அவர்களால் பூட்டப்பட்டு மறைமாவட்டத்தின்; அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலிகள் இடம்பெறுமெனவும் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய ரீதியில் வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் 2024ஆம் ஆண்டு மார்கழி மாதம் 24ஆம் திகதி மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் திறந்துவைக்கப்பட்ட யூபிலி கதவும் வருகின்ற 2026ஆம் ஆண்டு தை மாதம் 06ஆம் திகதி திருக்காட்சி பெருவிழாவன்று திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களால் பூட்டப்படவுள்ளது.

அத்துடன் கடந்த வருடம் யூபிலி ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நாளில் ஆயர் அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட யூபிலிச்சிலுவை யாழ். மறை மாவட்டத்தின் எல்லா பங்குகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு தற்பொழுது இறுதியாக பருத்தித்துறை மறைக்கோட்ட பங்குகளில் ஆராதிக்கப்படும் இவ்வேளையில் வருகின்ற 28ஆம் திகதி அத்திருச்சிலுவை மரியன்னை பேராலயத்துக்கு எடுத்து வரப்பபட்டு மரியன்னை பேராலயத்தில் பொருத்தமான இடத்தில் நிரந்தமாக கொலுவேற்றப்படுமெனவும் குருமுதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

By admin