தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழமுக்கம் டிட்வா புயலாக உருமாறி இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் பாரிய அனர்த்தங்களை ஏற்படுத்தி 100ற்கும் அதிகமான மக்களை பலியெடுத்துள்ளது.
இரு காற்றுச்சுழற்சிகள் ஒன்றிணைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, 130 ஆண்டுகளின் பின் இலங்கையை ஊடறுத்து நகர்ந்து செல்லும் இவ் அபூர்வமான ஆபத்தான அனர்த்தத்தில் சிக்குண்ட இலங்கை நாடு முழுவதும் வரலாறு காணாத பெரும் அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளது.
இலங்கை முழுவதும் வடக்கு நோக்கி டிட்வா புயல் சுழன்றடித்ததில், கொழும்பு, அனுராதபுரம், பதுளை, நுவரெலியா, கேகாலை, கண்டி, இரத்தினபுரி, வவுனியா, முல்லைத்தீவு உள்ளிட்ட 17 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மண்சரிவு, அதிக மழைவீழ்ச்சி, வெள்ளப்பெருக்கு போன்ற பேர் அனர்த்தத்தில் சிக்குண்ட மக்களை காப்பாற்ற அரச படையினரும் இளைஞர் அணியினரும் களத்தில் நின்று தொடர்ச்சியான மீட்பு பணியாற்றி வருகின்றனர்.
தொலைத்தொடர்புகள், மின்சார இணைப்புக்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் பெரும் சிக்கல்கள் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதான வீதிகளின் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் படகு சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் விமானப்படையினரின் உலங்கு வானூர்திகள் மூலமாகவும் மீட்புபணிகள் நடைபெற்று வருகின்றன.
மன்சரிவுகளில் சிக்குண்ட வீடுகளில் இருந்தவர்கள், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்கள், வெள்ளத்தில் இழுத்துச்செல்லப்பட்ட வாகனத்தில் பயணித்தவர்கள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்டதில் சிக்குண்டவர்களென துயரமான சம்பவங்களும் இவ்வனர்த்தத்தில் பதிவாகியுள்ளதுடன் கால்நடைகளும் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன.

