கிளறேசியன் துறவற சபையின் கிளாறட் சிறுவர் கதம்பத்தினால் முன்னெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி கார்த்திகை மாதம் 9ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் சுண்டுக்குளி கிளாரட் சிறுவர் கதம்ப வளாகத்தில் நடைபெற்றது.
கதம்ப இயக்குநர் அருட்தந்தை அல்பேட் ஜோசப் அருள்ராஜா அவர்களின் தலைமையில் “பொறுப்புடைமை மிகு எனது ஆளுமை” என்னும் கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் தலைமைத்துவம், தன்னம்பிக்கை, முடிவெடுக்கும் திறன், குழு பண்பாடு, நேர மேலாண்மை மற்றும் பிரச்சினை தீர்வு போன்ற தலைப்புக்களில் கருத்துரைகளும், களத்தரிசிப்புகள் மற்றும் புலக் கற்றல் என்பனவும் இடம்பெற்றன.
17ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற இறுதிநாள் நிகழ்வில் வடமாகாண கல்வித்திணைக்கள உளசமூக வள நிலைய உதவி முகாமையாளர் திருமதி விக்டோரியா எல்விஸ் பிரெஸ்லி அவர்களின் சிறப்புரையும் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கலும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் துணுக்காய், முல்லைத்தீவு, யாழ்ப்பாண கல்வி வலய பாடசாலைகளை சேர்ந்த 32 மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

